Thursday, October 14, 2010

சிங்கப்பூர் தைப்பூசம்

சிங்கப்பூர் தைப்பூசம் குவிந்த வெளிநாட்டினர் !


கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் பகுத்தறிவாளர்களுக்கும் அலகு குத்துவதில் உடன்பாடு இல்லாதவர்களுக்கும் உண்டான இடுகை அல்ல இது. தொடர்வது உங்கள் விருப்பம், நம்பிக்கை உள்ளவர்கள் மனம் புண்படும் படியான கருத்துக்களை தவிர்க்கவும் 
 சிங்கப்பூர் தைப்பூசம் குவிந்த வெளிநாட்டினர் !
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்து பண்டிகையில் தமிழ் கடவுளான முருகப்பெருமானின் தைப்பூச திருவிழா முக்கியமானது. இது தமிழகத்தை விட சிறப்பாக சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கொண்டாடப்படுகிறது, அதுவும் மலேசியா அதகளப்பட்டு விடும் இந்த முறை 10 லட்சம் பேர் வந்து இருந்ததாக கூறப்படுகிறது.
நான் உங்களுக்கு சிங்கப்பூர் தைப்பூசம் பற்றி கூறப்போகிறேன். வருடாவருடம் சிங்கப்பூர் ல் தைப்பூச திருவிழா கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது, இதை நான் கூறவில்லை சிங்கப்பூர் தமிழ்ச்செய்தி சேனலான வசந்தம் தொலைக்காட்சி கூறி இருக்கிறது.  இந்த வருடம் என் வீட்டின் அருகே உள்ள சிங்கப்பூர் தமிழ் குடும்ப நண்பர் உறுப்பினர்கள் காவடி எடுத்ததால் அவர்கள் வீட்டில் எங்களை அழைத்து இருந்தார்கள். அவர்களுடன் கோவிலில் காவடியின் ஆரம்பகட்ட நிலையை முதன் முதலில் காணும் வாய்ப்பு கிடைத்தது.
சில சுவாராசியங்கள் 
ங்கள் வீட்டில் இருந்து செல்ல காவடியை எடுத்து செல்ல அவர்கள் ஒரு லாரியை ஏற்பாடு செய்து இருந்தார்கள். நீண்ட வருடங்களுக்கு பிறகு லாரியில் கிளம்பி சென்றது ரொம்ப சந்தோசமாக இருந்தது அதுவும் சிங்கப்பூரில்.
 சிங்கப்பூர் தைப்பூசம் குவிந்த வெளிநாட்டினர் !
காவடி எல்லாம் மரத்தில் செய்வது அந்த காலம், இங்கே பெரும்பாலும் அனைவரும் ஸ்டீல் காவடி தான் எடுக்கிறார்கள். மிகப்பெரியதாக உள்ளது.
ஒரு சில காவடி வேலைப்பாடுடன் செய்ய 5000 சிங்கப்பூர் டாலர் அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக 1,60,000 வரை உள்ளது. நிஜமாகவே.. நம்பினால் நம்புங்கள்.
காவடி ஊர்வலம் லிட்டில் இந்தியா பெருமாள் கோவிலில் துவங்கி டோபி காட் என்ற இடத்தில் உள்ள முருகன் கோவிலை அடைகிறது (தோராயமாக இரண்டு கிலோ மீட்டர்)
இந்த முறை என்னுடைய மகனையும் அழைத்து சென்று இருந்ததால் என்னுடன் வந்தவர்கள் காவடி புறப்படும் வரை இருந்து விட்டு கிளம்பி விட்டேன், இவனுக்கு தூக்கம் வந்து விட்டதால், அதனால் கடந்த முறை போல இந்த முறை ஊர்வலம் பார்க்க முடியாமல் போய் விட்டது :-(
இருந்தாலும் முதன் முறையாக என் வாழ்க்கையில் அலகு குத்துவதை பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
வெளிநாட்டினர் பெருமளவில் குவிந்து விட்டனர், உயர்தர கேமராக்களை கொண்டு படமாக சுட்டுத்தள்ளிக்கொண்டு இருந்தனர். சீனர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் என்று ஏகப்பட்ட பேர். இதற்காகவே காத்திருந்து ஆர்வமாக படமெடுக்கிறார்கள்.
 சிங்கப்பூர் தைப்பூசம் குவிந்த வெளிநாட்டினர் !
நான் உள்ளே நுழைந்த போது மேளச்சத்தம் பட்டயகிளப்பிக்கொண்டு இருந்தது. ஒரு குழுவினர் அடித்த அடியை பார்த்து ..மவனே! தூக்குடா கிரி காவடிய! என்கிற ரேஞ்சுக்கு ஆகி விட்டேன். கை காலெல்லாம் பரபர என்று ஆகி விட்டது.
இந்தக்குழுவினர் அனைவரும் ஒரே மாதிரியாக உடை அணிந்து இருந்தனர், இவர்களுக்கு பிறகு பலர் வந்தாலும் இவர்கள் அடிக்கு இணையாக கூட யாரும் இல்லை. பட்டாசாக இருந்தது. இவர்கள் அடிக்கும் போது நமது உடலில் மின்சாரம் பாய்ந்ததை போல இருந்தது.
சீனர்களும் அதிகளவில் காவடி பால்குடம் எடுத்து இருந்தனர், அவர்களில் ஒருவர் போட்ட ஆட்டம் இன்னும் கண்ணுக்குள் உள்ளது. நம்மவர்களுக்கு சற்றும் சளைக்காமல் குஷியாக ஆட்டம் போட்டார்.
எங்க குடும்ப நண்பர் மகன் முதலில் அலகு குத்துவதை நினைத்து பயந்து கொண்டு இருந்தார் (கல்லூரி படிக்கும் வயது தான்), முதல் முறை என்பதால். பின் கடவுளை வணங்கி விட்டு அலகு குத்தும் போதும் குத்திய பிறகும் எந்த பயமும் இல்லாமல் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தார்.
அவரது காவடியில் வித விதமாக அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது, அனைத்தும் முடிந்து தயார் ஆகி அங்கே அடித்த அடிக்கு ஒரு ஆரம்ப ஆட்டம் போட்டு குஷியாக கிளம்பி விட்டார்,
இந்த முறை புறப்படும் இடமான பெருமாள் கோவிலில் மட்டுமே மேளச்சத்தத்திற்கு அனுமதி கொடுத்து இருந்தார்கள் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்து விட்டார்கள், காரணம் சென்ற முறை பிரச்சனை ஆனது என்பதால். மேளச்சத்தம் இல்லாத காவடி ஊர்வலத்தை நினைத்தால் சப்பென்று இருக்கிறது.
நான் ஊர்வலம் பார்க்கவில்லை என்பதால் மேளச்சத்தம் இருந்ததா! என்று தெரியவில்லை. பொதுவாக ஒருவரை களைப்படைய வைக்காமல் மற்றும் வலி தெரியாமல் இருக்க வைப்பது இந்த மேளச்சத்தம் தான். மேளச்சத்தத்துடன் காவடி ஊரவலத்தை பார்ப்பது ஒரு கண் கொள்ளா காட்சி.
 சிங்கப்பூர் தைப்பூசம் குவிந்த வெளிநாட்டினர் !
அலகு குத்துவதை வெளிநாட்டினர் வளைத்து வளைத்து படம் எடுத்துக்கொண்டு இருந்தனர். ரொம்ப ஆர்வமாக அது பற்றிய விவரங்களை அங்கே இருந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். ஒரு வெளிநாட்டுப்பெண் அலகு குத்துவதை மிக மிக ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டு இருந்தார். ஒரு வெள்ளைக்காரர் அவரது குடும்பத்தினரிடம் மேள சத்தத்திற்கு ஏற்ப ஆடி அவர்களை மகிழ்வித்துக்கொண்டு இருந்தார்.
என் குடும்ப நண்பர் மகன் அலகு குத்தி தயாராக இருந்த போது அங்கு வந்த அவரது உறவினர் பெண், அவரது கன்னத்தை தடவி பாசமாக ஒரு முத்தம் கொடுத்த போது அதை பார்த்துக்கொண்டு இருந்த வெளிநாட்டினர் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்து..சற்று தன்னை மறந்து மீண்டும் பழைய நிலைக்கு வந்து.. அதை புகைப்படங்களாக சுட்டு தள்ளினார்கள்.
இன்னொரு அவர்களது குடும்ப உறுப்பினர் 25 வருடமாக காவடி எடுக்கிறார், அவர் நெற்றியில் சிறிய அலகு குத்தினார்கள் (இது தான் அலகு குத்துவதில் ஆரம்பம் போல உள்ளது) அப்போது அவரது கண்கள் கடவுளை நினைத்து கண்கலங்கியது. ஒருவித பரவசத்தில் என்னெவென்று விவரிக்க முடியாத படி அவர் அந்த ஒரு நிமிடம் மட்டும் அற்புதமாக வார்த்தைகளால் கூற முடியாதபடி உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்.
 சிங்கப்பூர் தைப்பூசம் குவிந்த வெளிநாட்டினர் !
இந்த வருடத்தில் புதிதாக கண்டது .. ஒரு கால் இல்லாத ஒருவர் (பார்க்க படம்) இதில் கலந்து கொண்டது.. இன்னொரு பெரியவர் ஃபுட்பால் விளையாடும் போது போடும் ஹேங்லெட் மாதிரி ஒன்றை அணிந்து காவடி எடுத்தது…. ஆச்சர்யமாக இருந்தது.
ஒவ்வொரு காவடி வெளியே செல்லும் போதும் அதில் அடையாளமாக டோக்கன் கட்டப்படுகிறது. இவர்கள் மட்டுமே காவடி எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். 
இது ச்சும்மா ட்ரைலர் தாம்மா .. மெயின் பிக்சர் (காவடி ஊர்வலம்) நான் பார்க்கலை :-)
கடந்த வருட தைப்பூச இடுகை சிங்கப்பூரை அதிர வைத்த தைப்பூசம். இதைப்படித்தால் சிங்கப்பூர் காவடி ஊர்வலம் எப்படி இருக்கும் என்று நீங்கள் உணர்ந்து கொள்ளலாம் :-)

No comments:

Post a Comment